96

 

 “என்னோட சந்தோஷமெல்லாம் .. அவ முகத்தை பாக்கணும், அவ சிரிப்பு சத்தத்தை கேக்கணும், அவ அழுகாம  [ ஒழுங்கா படிங்க 😉 ] இருக்கணும்.. ஊரை சுத்தறதுல எனக்கு சந்தோஷமில்ல. அவளை சுத்தறதுல தான்” ..

இது 1991 “இதயம்” திரைப்படத்தில் “உள்நோக்கிய”,  நாயகன் ராஜாவின் மன வெளிப்பாடு. படம் வந்த புதிதில் தன்னை பெரும்பாலான ஆண்கள் ராஜாவாக கருதிக்கொண்டனர்; இவன்தாண்டா நான் என விடிய விடிய பேசினார்கள்; கடந்த ஆண்டில் வெளிவந்த “மேயாத மான்” பட நாயகனும் தன்னை இதயம் முரளி என்று சொல்லிக்கொண்டதிலிருந்து இந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ளலாம். ராமாவது தஞ்சாவூர்ல பத்தாவது படிக்கற பையன். மேல சொன்ன ராஜாண்ணன் 5 வது வருஷம் மெடிக்கல் காலேஜ்ல படிச்சிட்டு, “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” பாட்டுப் பாடி, சொல்ல வந்த காதலை சொல்லாமலே அழுத்தி, கடைசில  இதயம் பழுதாகிப் போனவர் அவர் – அவர் கதையே அப்படி. அந்தப் பருவத்தில், ஒரு பாதுகாவலன் போல பின்னால் தொடர்வதும், ஒரு பஸ் பிரயாணம் முழுவதுமே பேசாமல் பயணிப்பதும், கற்பனையாகவே சைக்கிளில் பேசிக்கொண்டு போவது என்பதெல்லாம் அந்தக் காலகட்டத்தின் வடிவமைப்பாக இருந்தது. பல்லவன் பஸ்ஸில் ஒரு “சிக்ஸ்டி” பாஸ் பண்ணுங்க, ரெக்கார்ட் நோட்டு இருக்கா, சார்ட் பேப்பர் வேணுமா போன்ற அதி முக்கியமான [?!] உரையாடல்களை 2 மாசத்துக்கு ஒரு மத்தியான மாட்டு போல அசை போட்டு பேசும் சாவகாசமான காலம் அது.  முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்றில் “மணி என்ன” எனக் கேட்கும் யுவதியை ஆளில்லாத தீவுகளுக்கெல்லாம் கூட்டிப் போய், சுற்றி வந்து அதே இடத்தில் விட்டுவிடுவார். “ஏப்ரல் மேயிலே” பாடலுக்கும் “குலேபா” பாடலுக்கும் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். நினைச்சதை சொல்லாம இப்படி மென்னு முழுங்கறது ஒரு கதையான்னு கேட்கறவங்களுக்காக இந்த முன்னோட்டம்.

 

கதை :

இருபத்திரண்டு வருடங்களுக்கு பின்னர் ஒரு பள்ளிகூட மாணவர்கள் ஒன்றிணையும் கூட்டம் நடைபெறுகிறது – வெவ்வேறு பாதையில் பயணிக்கும் ராமும், ஜானும்வும் அதில் சந்தித்துக் கொள்வதிலிருந்து துவங்கி மறுநாள் காலை வரை நடக்கும் நிகழ்வுகளும், நினைவுகளுமே கதை. ஒரு பைக் டோக்கனின் பின்னாடி எழுதக்கூடிய இந்தக் கதையை நமக்கு விவரித்த விதம் தான் இந்தப் படத்தைப் பற்றி எழுதத் தூண்டியது.

 

 

பார்வை

TDK ஆடியோ கேசட், ஷேவிங் ப்ளேட், டிவி ஆண்டெனா, ராணி காமிக்ஸ், கொடுக்காபுளி, பம்பரம், காத்தாடி, பைசாக்கள், பிரில் இன்க் என  அந்த நாட்களின் அடையாளத்தை எல்லாம் சேர்த்து செய்த கோபி பிரசன்னாவின் பெயர் வரிவமைப்பாகட்டும்,  காது மடலெல்லாம் கூசும் அந்த ஒற்றை வயலினை இழுத்து இழைத்த “காதலே காதலே” என்னும் மாயாஜாலப் பாடலாகட்டும், பெயர் சொன்ன மாத்திரத்தில் மூச்சடைத்துத் திக்கித் திணறும் ராம், கண்ணில் ஆயிரம் கவிதைகள் காட்டும் ஜானுவாகட்டும் என இந்தப் படத்தின் முன்னோட்டமே அதகளமாக இருந்தது.

படத்தின் துவக்கத்தில் டைட்டிலும், விஜய் சேதுபதி, திரிஷாவின் பெயர்கள் மட்டும் காண்பிப்பதில் தொடங்கி விடுகிறது ராம் மற்றும் ஜானுவின் வாழ்வு. ஒரு முன்னாள் பள்ளி மாணவர்கள் இணைப்புவிழாவை வெகு சுலபமாக, விரைவாக வாட்ஸ்ஆப் மூலம் நிகழ்த்த முடிவதையும் அவர்களின் பள்ளி நாட்கள் மிக மெதுவாகவே நகரும் கால வித்தியாசத்தையும் நமக்கு உணர்த்தப்படுகிறது. அந்த ஒரு இணைப்பு விழா நாளில், கல்யாணம் ஆகி விட்ட ஜானுவிற்கும் , ஆகாமல் தனியே வாழும் ராமிற்கும் இடையில் நிகழும் பேசப்படாத அத்தனைப் பொருள்களையும் பேச, சிரிக்க, கதறி அழ, தடுமாற, சுதாரித்திக் கொள்ள வைக்கிறது. சற்று தடம் மாறினாலும், உடல் சார்ந்த ஈர்ப்பாக மாறிவிடும் சாத்தியம் இருந்தாலும், அதை வெகு அழகாக கையாண்டிருக்கிறார்கள். இரு வேறு முகஅமைப்பில் வித்தியாசம் காட்டும், கண்ணைப் பார்க்க முடியாமல் அவசரமாக உரையாடல் முடிக்கும், முழுக்க அவள் நலம் மட்டும் யோசிக்கும் – ராம் மற்றும் வாழ்வில் எல்லாம் கடந்த நிலையிலும் சகஜமாக பேசுவதும், அவன் வாழ்வை தெரிந்து கொள்ளும் ஆர்வமும், அக்கறையுமாக வரும் ஜானுவும் வாழ்ந்திருக்கின்றனர். குறிப்பாக, கதையின் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட அவர்கள் இருவர் உரையாடல் மட்டுமே, ஒரு 45 நிமிடங்களுக்கு தனியே திரையில் கடப்பதை தமிழ் சினிமா இதற்கு முன்னால் செய்ததில்லை.

இதில் இரண்டு விதமான இசைக்குறிப்புகள். பின்னணி இசையும் பாடல்களும் என ஒன்று.. பள்ளி பருவ நாட்களும் இளையாராஜா இசை என ஒன்று.  இதன் பாடல்கள் படத்தின் இழைகளோடு பின்னி வருவதால் பெரிதாக, தனியாக தெரியவில்லை [ கரை பாட்டு ஒட்டாத ஒரு பாடல்].. மற்றபடி மாயநதி போலவே ஒரு பாட்டும் காதலே காதலே என உருகி வழியும் பாடலும் மிகப் பிரமாதம். இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் விப்புகளை குவிக்கிறார். இன்னொரு மிகப் பெரிய ஆச்சரியம் பள்ளி வயதில் ஜானு தன்னை எஸ்.ஜானகியாக பாவித்து அவரின் பாடல்கள் மட்டும் பாடுவது.. புத்தம் புது காலை, ஆசை அதிகம் வச்சு, தங்கச் சங்கிலி, தென்றல் வந்து தீண்டும் பாடல்கள் இவை வெறும் பாடல்களாக வருவது பெரிய ஆச்சரியமில்லை.. ஆனால் அந்த வரிகள் இந்தப் படத்துக்கு பொருந்தி போவது நிச்சயம் ஆச்சர்யமே.. “எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது” என ஜானு பாடும் சந்தர்ப்பம் ஒரு உதாரணம். அதைவிட பிரமாதம் சோனு மித்தாலி பாடிய “யமுனை ஆற்றிலே” பாடல் வரும் மாயக் கணமும், “பாவம் ராதா” என்று தன்னை பொருத்திக்கொள்ளும் அந்த சிலிர்ப்பான சூழலும் , அதற்கு ராமின் எதிர்வினையும் கவிதை.

 

“நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.பிரேம்குமார் எழுதி இயக்கிய முதல் படம் இது என்றால் சற்றே யோசிக்க வைக்கும். ஒரு ஒளிப்பதிவாளர் எழுதி இயக்குவதால் வந்த ஆச்சர்யமள்ள அது – அவரின் முதல் படைப்பு என்பதே அந்த வியப்பிற்கான காரணம். மணிரத்னம் போன்ற படைப்பாளிகள் வணிகப் பாதுகாப்பிற்காக  சாதாரண கேங்க்ஸ்டர் படங்கள் எடுப்பதும், முதல் படத்திலேயே இப்படி ஒரு வணிகப் பூச்சில்லாமல், முதிர்ச்சியான களத்தை ஒரு புது இயக்குனர் துணிந்து முயற்சிப்பதும் ஒரு பெரிய முரணாகப் பார்க்க வைக்கிறது.  அதே போல், 90 களின் கலை இயக்கத்திக்கு எதையும் வலிந்து திணிக்காமல் சன்னமாக அந்த காலகட்டத்தை நிறுவுவது சிறப்பு. இதில் ஒன்றை குறிப்பட வேண்டும்.. செல்ஃபோனின் முந்தைய காலத்திற்கு முன்னாடி போய்விட்டால் திரைக்கதையை நிதானமாக யோசித்து எழுதலாம். சுப்ரமணியபுரத்தின் பலமும் அதுவே. “காதல் கோட்டை” கமலியிடமும் சூர்யாவிடமும் சாம்சங் போன் இருந்த்திருந்தால் நடந்திருப்பதே வேறு.

சாதரணமாக யோசிக்கும் சில தர்க்கப் பிழைகள், சற்றே இழுக்கப்பட்ட இறுதிக்காட்சிகளையும் மீறி ராம் மற்றும் ஜானுவின் கதாபாத்திரங்களின் அலைவரிசையும், இரு காந்தங்களுக்கு இடையே உள்ள வெற்றிடமும், கைவிரல் இடுக்கில் நழுவி விழுந்த இருபது ஆண்டுகளில் சுமையும் நமக்கு சுலபமாக கடத்தப் படுவதும், அதிலிருந்து நம்மால் விடுபடாமல் இருப்பதுமே இந்தக் கதையின் வெற்றி. எல்லாவற்றையும் தர்க்க ரீதியிலேயே கேட்டு, உடனுக்குடன் எல்லா விழயத்தையும் செல்போனில் சரி பார்க்கும் அவசர வாழ்வில் இருப்பவர்களுக்கு, ஒரு நாள் நடு இரவில் கேட்ட ஒரு ஒலிக்குறிப்பு வந்த பாடலின் முதல் வரி எது என இரண்டாவது நாளின் இறுதியில் கண்டுபிடித்து, தானே நகரும் வண்டி மாட்டைப் போலப் போன சாவகாசமான நாட்களை இந்தப் படம் நமக்கு மீட்டுத் தருகிறது.

 

இரவில் பண்பலையில் பழைய பாடல்கள் தொகுத்து வழக்கும் யாழ் சுதாகர் இப்படி குறிப்பிடுவார்.. “ அவசர யுகந்தன்னில் இறுகிப் போன இதயங்களையும், அமிழ்ந்து போன மனங்களையும் உற்ற்ச்ச்சாகம் கொள்ள வைத்து உங்களை மீட்டெடுக்க வரும்.. நாத கலாஜ்ஜோதி இளையராஜ்ஜாவின் இசை வார்ப்பில் இந்தப் பாடலைக் கேளுங்கள் “ அப்படித்தான் நம்மை கடந்த கால ரயிலேற்றி ஒரு பயணத்திற்கு அழைத்துப் போகிறது பேரன்பே காதலான 96 என்னும் கவிதைத்தொகுப்பு.

டோட்டோ.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.