கூழாங்கற்களின் கதை
ஒரு திருவிழாவில், பெரிய தேர் வெளியே வந்து, ஊர்சுற்றி திரும்ப நிலைக்கு வரும் நிகழ்வானது, மொத்த ஊரும் கூடிச்சேர்ந்து ஆர்வமாகச் செய்யும் பணி. இதில் தேர் செய்த தச்சன், மின்சார ஒயர் தூக்கி பிடிப்பவர், சக்கரம் நிற்க கட்டை போடுபவர், கயிறு பிடித்து இழுக்கும் கடைக்கோடி மக்கள், கூட்டம் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் என அனைவரின் பங்களிப்பும் அதில் அடக்கம். அதே போலத்தான் ஒரு திரைப்படமும், அதன் பிரதான மற்றும் துணைக் கதாபாத்திரங்களும் – மிஸ்ஸியம்மா காலம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை காலம் வரையிலும், நேர்மையாக எழுதப்பட்ட ஒரு கதைக்கு, அதன் நிகழ்வுகள் நகர முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு சிறு கதாபாத்திரமும், அதன் பங்களிப்பும், அது பார்வையாளனுக்கு கடத்தும் பாதிப்பும் மிக முக்கியம். நிஜ வாழ்விலும் கீச்சுக் குரலில் பேசுமொரு அக்காவையோ, செய்கையாலேயே நிறைய பேசும் ஒரு வாய்பேச முடியாத அண்ணனையோ, முழங்கை மடிப்பில் கூட பவுடர் போட்டுக்கொள்ளும் ஒரு பெரியப்பாவோ, மற்றவர் போல பேசிச் சிரித்துக்காட்டும் நண்பரையோ நம்மால் எளிதில் மறக்க இயலாது. அவ்வாறே அமைந்த, திரைப்படங்கள் சார்ந்து, நமக்கு மிகவும் பரிச்சயமான சில உதாரணங்களைக் கொண்டு, இவ்வகை கதாபாத்திரங்களை ஆராய்வோம்.
ஒன்று : மேற்கு தொடர்ச்சி மலை – மலை சார்ந்து வாழும் சுமைக்கார ரங்கசாமியின் தனி மற்றும் பொது சமூக வாழ்வியல் சொல்லும் நேர்மையான இந்த படத்தில் ஒரு மனம் பிறழ்ந்த கிறுக்கு கிழவியின் கதாபாத்திரம் பற்றி பார்க்கலாம்.. இத்தனைக்கும், இந்த மாதிரி மனம் பிறழ்ந்தவர்களை எல்லா டவுனிலும், சிறு ஊர்களிலும் நம்மில் பெரும்பாலோர் பார்த்தே வளர்ந்திருப்போம். . மலையிலிருந்து இறங்கி, தன் மகளுக்குத் திருமணம் செய்யப் போகும் வேளையில், அவள் கணவன் யானைகளால் தாக்கப்பட்டு இறக்க, அவர்கள் கொண்டு செல்லும் பணமும் மலையில் சிதறிய நிகழ்வால், புத்தி பிசகி யானைகளைத் திட்டியும், பணத்தைத் தேடிக்கொண்டும் மலையில் அலைய, மற்ற உறவினர்களால் திருமணம் நடக்கும் மகள் அவ்வப்போது அவரைப் பார்த்துக்கொள்ள, அவளிடம் வளையல்கள் மட்டும் விரும்பி வாங்கி போட்டுக்கொள்ளும் ஒரு கிழவியின் சிறு பாத்திரம் நமக்கு உணர்த்தப்படுகிறது. பின்னர் அவர், ஓர் அடை மழை வெள்ளத்தில் அவரின் வளைக்கரம் மட்டும் வெளியில் தெரிய ஒரு மண் சரிவில் புதைந்து இறந்து போகிறார். சில நிமிடங்களே திரையில் வந்தாலும், மலைகளில் எதிரொலிக்கும் அவள் கூச்சலும், தொலைத்த வாழ்வும், தேடலும் மலைவாழ் மக்களின் ஒரு சிறு துணுக்காக நமக்கு உணர்த்தப்படுகிறது. கிட்டத்தட்ட அவள் வாழ்வின் நீட்டப்பட்ட வடிவம் தான் ரங்கசாமியின் வாழ்வு. மழை முடிந்த பின்னும் எரவாண நீர் சொட்டுவது போல நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்யும் அந்த சிறு கதாபாத்திரம்.
இரண்டு :அன்பே சிவம் – பெண் பாதிரியார். “எக்ஸ்கியூஸ் மீ.. ஹீ இஸ் சிரியஸ்” என ஆரம்பித்து ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் அந்த கன்னியாஸ்திரியின் கதாபாத்திரம். “யார் யார் சிவம்” பாடலில் கமல்ஹாசனின் மாபெரும் திரை இருப்பையும் மீறி, தனியே தெரியும் அந்த பெண்மணியின் கனிவும், எதிர்பார்ப்பில்லாமல் பொழியும் அன்பும் மற்றும் பாடலின் முடிவில்.. “ நல்லா .. ஐ ஃபார்காட் சம்திங்” என்று நல்லசிவத்தை அணைத்து, கண்ணீர் பெருக வழியனுப்பும் விதமும் எத்தனை வருடங்களானாலும் மறக்க முடியாதது. அவரே, இன்னொரு ரயில் விபத்துக் காட்சியில் ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் சமயம் “ஒரு உயிரைக் கொன்று இன்னொரு உயிரைக் காப்பாற்ற மாட்டோம் ப்ராமிஸ்” என சொல்வதும் இன்னொரு அழுத்தமான தருணம். இந்த கதாபாத்திரத்தை நமக்கு தெரிந்த ஒரு துணை நடிகையை வைத்து செய்திருந்தாலும் அது நினைவில் அழிந்து போயிருக்க கூடிய சாத்தியம் அதிகம். படத்தில் சில நிமிடங்களே வந்தாலும், நம்மில் அந்த வெள்ளை அங்கி அன்னையின் கதாபாத்திரம் ஏற்படுத்தும் பாதிப்பு காலம் கடந்தும் அகலாதது.
மொழி – ப்ரொஃபசர் ஞானப்பிரகாசம். தன் மகன் விபத்தில் இறந்த பாதிப்பில் நினைவுச்சிக்கலில், ஒரு குறிப்பட்ட காலத்தில் உறைந்து அதைத் தாண்டாமல், தன்னுள்ளே ஒரு உலகத்தில் “ மணிரத்னம்னு ஒரு புது இயக்குனர் ப்ரில்லியன்ட் பாய்” “யங்ஸ்டர்ஸ் ஷுட் கம்.. கவாஸ்கர் ஷுட் ரிட்டயர்” என்று 1984-85 காலத்தில் வாழும் ஒரு கதாப்பாத்திரம். “மார்க் மை வர்ட்ஸ்.. 2000 இல் எல்லாமே கம்ப்யூட்டர் மயம் தான்” என கடந்த காலத்தையே எதிர்காலமாகப் பார்க்கும் ஒரு அபூர்வ சித்தரிப்பும் மொழி படத்தின் நிறை அம்சங்களில் ஒன்றாக நினைக்க வைக்கிறது. இதை சாதரணமாக ஒரு ஞாபகமறதி பேராசிரியராக போகிற போக்கில் வெறும் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தாமல் அதிக பட்சம் மூன்று அல்லது நான்கு காட்சிகள் மட்டுமே வந்தாலும் தன உலகத்தில் வாழும் கதாநாயகியின் மற்றொரு சிறு வடிவமாக இந்த கதாப்பாத்திரம் கதையை இன்னும் அழகூட்டுகிறது,
இவை தவிர, எப்போது “அட வாத்சயானா” என அடிக்கடி கூறும் “நிழல் நிஜமாகிறது” மன்மத நாயுடு, “அஞ்சு ரூபா குடு” என்று சத்தமாகப் பேசி ஒரு பறவையைப்போல இறகை அடித்து இறந்து போகும் “அஞ்சாதே” குருவி, உதவி இயக்குனர் முயற்சியின் வழியை ஒரு பீடியின் இழுப்பில் தன் கதை சொல்லும் “ஜிகர்தண்டா” பெட்டிக்கடை பழனி [ சங்கிலி முருகன் ], ஒரு விபத்து ஏற்படுத்திய படபடப்பைக் காட்டும் “அலைபாயுதே” மீனா [ குஷ்பூ ], “ஒரே அசிங்கமா போச்சு குமாரே” என தன்னிலை விளக்கம் தரும் புதுப்பேட்டை அப்பா, ஒரு கர்ப்பிணியின் சோர்வோடு விசாரணையை விடாமல் நடத்தும் “மௌனகுரு” இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், ஆங்கிலமும் தமிழும் கலந்து அடிக்கும் “மெட்ராஸ்” ஜானி, அதே படத்தில் பாத்திரமாக கூட இல்லாமல் வெறும் ஒரு சுவர் ஓவியமாக வரும் வ.ஐ.ச.ஜெயபாலன், சல்யூட் அடித்து சிலை போல நின்று “அய்யா” என்று குண்டடிப்பட்டு இறக்கும் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” காவல்துறை ஊழியர் என இந்த பட்டியல் தமிழ் சினிமாவின் ஒரு சிறு பகுதி மட்டுமே.
ஒரு ஓடையில் பயணிக்கும் மீன்களுக்கு மட்டுமல்ல, அதன் அடி ஆழத்தில் உருளும் கூழாங்கற்களுக்கும் ஒரு தனித்துவமும், முக்கியத்துவமும் உண்டு.
டோட்டோ.