பரியேறும் பெருமாள் BA BL.

பரியேறும் பெருமாள் BA BL – மேல ஒரு கோடு

 

“உன் பேர் என்ன ? “ – நாம், அன்றாடம் அதிகம் எதிர்கொள்ளும் இந்த கேள்வி மிக சாதாரணமாகத் தோன்றினாலும், அது கேட்கப்படும் இடம் அதன் தீவிரத்தை முடிவு செய்கிறது. புதிதாய் சேர்ந்த பள்ளியில், பூங்காவில் ஒரு குழந்தையிடம், நேர்முகத் தேர்வில், காவல் நிலையத்தில் [ இரவில் ! ], நீதிமன்றத்தில் என மாறும் அர்த்தங்களை விடுவோம் – இதுவே, பற்றியெரியும் கலவரத்தின் நடுவில், ஆயுதம் ஏந்திய ஒரு கூட்டத்தில் பிடிபட்டுக் கேட்கப்பட்டால்..  – “ஃபிராக்” திரைப்படத்தில் அப்படி ஒரு கலவர தருணத்தில் பிடிபடும் ஐந்து வயது சிறுவன், கழுத்தில் இருக்கும் தாயத்தை மறைத்து மோசின் என்னும் தன் பெயரை மோகன் என மாற்றிக் கூறுவது, பல விஷயங்களை நம்மை யோசிக்க வைக்கும். “இதெல்லாம் இப்ப யார் சார் பாக்கிறாங்க” என்று மேலோட்டமாக கடக்கமுடியாத / கடக்கக்கூடாத விஷயம் இது. இந்த வன்முறையின் மற்றொரு உபபிரிவு கேள்விதான் நீங்க சைவமா அசைவமா என்பதும். நம் மாநிலத்தைத் தாண்டினாலே நாம் எதிர்கொள்ளும் இன்னொரு அபாயம் “குடும்பப்பெயர்” [ ஆங்கிலத்தில் சர்நேம் ]. இந்திய தேசத்தை விடுவோம்.. இன்னமும், அமெரிக்காவில் வாழும் நம்மவர்கள் மத்தியிலும் குடும்பப் பெயரை [ சர் நேம் ] தெரிந்து கொள்ளும்  கயமையும், அது சார்ந்து குழுக்கள் இயங்கும் உண்மையும் நாம் கடக்க முடியாத கசப்புகள். இந்தப் பின்னணியில் பா.இரஞ்சித் அவர்களின் “நீலம் ப்ரோடக்ஷன்ஸ்” தயாரிப்பில், புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜ் [ ராம் அவர்களின் உதவி இயக்குனர் ] இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்” படத்தைப் புரிந்து கொள்ளலாம்.

கதை

தூத்துக்குடி மாவட்டம் அருங்குளம் அருகே புளியங்குளம் என்ற கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடித்து வழக்கறிஞர் ஆகும் கனவில், சட்டக்கல்லூரியில் சேரும் பரியேறும் பெருமாளின் வாழ்வில் எதிர்கொள்ளும் இழப்பு, நட்பு, காதல், புது அறிமுகங்கள் அதனால் வரும் அவமதிப்புகள், சமூக நெருக்கடிகள், சாதிப்பிரிவு சார்ந்த சிக்கல்கள், யாரிடமும் பகிரக் கூட முடியாத நிகழ்வுகள் என இவையாவும் சொல்வதே கதை.

 

பார்வை

“ஹரிஜனப் பெண்” – இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1937. “சந்தனத்தேவன்” வெளிவந்த ஆண்டு 1939. எனவே, இங்கு எதுவும் புதிதில்லை. ஆனால், 80 களில் சற்றே மறைமுகமாக இருந்த இம்மாதிரிப் படங்கள், 90 களில் வந்த படங்களில் மிகையாக்கப்பட்டு, சாதி வாரியாக பெருமை பேசும் படங்களாக வந்து குவிந்தன. படத்தின் இறுதியில் கருத்து சொன்னாலுமே, பெருமை பேசும் பாடல்கள் சாகாவரம் பெற்றுவிடுகின்றன. படங்களின் தலைப்புகளை உங்களின் யூகத்திற்கு விடுகிறேன். ஒரு உதாரணம் மட்டும் பார்ப்போம். – ஊர்ப் பெரியவர் மலைச்சாமி தெருவில் நடந்து முள் குத்த, செருப்பு தைக்கும் செங்கோடன் அவரை “சாமீ” என்றழைத்து பயபக்தியுடன் அதை எடுக்கும் காட்சியைச் சொல்லலாம்.  எனக்கு தெரிந்த வரையில்,  நந்தனார், பசி, கண் சிவந்தால் மண் சிவக்கும், தண்ணீர் தண்ணீர், ஒருத்தி, காதல், உறியடி போன்ற ஒரு வெகு சில படங்களே தலித் பார்வை சினிமாவாக தமிழில் வந்திருக்கிறது. கார்த்திக்கும், பிரபுவும், விக்ரமும் இங்கு நடிகர்கள் ஆனால் தென் மாவட்டங்களில் கதை வேறு. சினிமாவும், சாதியையும் இரண்டறக் கலந்த வரலாறை விட்டு நகர்ந்து படத்தை அலசுவோம்.

முதலில் பாராட்டப்பட வேண்டியது மாரி செல்வராஜின் அபாரமான எழுத்தை. அவர் நினைத்திருந்தால்.. எக்கச்சக்க சண்டைகள் வைத்திருக்கலாம், பழி வாங்கும் படலம் செய்திருக்கலாம், காதலை மட்டுமே மையப்ப்டுத்தியிருக்கலாம், பரியனை எல்லாரையும் வெட்டி வீழ்த்த வைத்திருக்கலாம், அல்லது அதிர்ச்சி முடிவு என்கிற பெயரில் தற்கொலை/கொலைகளில் படத்தை முடித்திருக்கலாம், பெரிய பிரச்சார படமாக ஆக்கியிருக்கலாம் – இவை எதையுமே அவர் செய்யவில்லை. “கத்தியை உறையிலிருந்து எடுக்காமலிருப்பதே உச்சபட்ச வீரம்” என்பதை அவர் புரிந்திருக்கிறார். கதையை மிக மெதுவாக கருப்பியின் படலத்திலிருந்து துவக்குகிறார். ஒவ்வொரு கதாபாத்திரமாக நம்மிடம் உலவ வைக்கிறார். யோகி பாபுவை ஆனந்த் என்னும் நண்பனாக வைத்து கதையை இலகுவாக்குகிறார். இன்னொரு பக்கம், மர்மமான ஒரு கொலையாளியையும் உலவ விடுகிறார். இவர்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க வைக்கிறார். ஒரு திருமணத்தில் நம்மை திகைத்து வாய்பேச முடியாமல் செய்கிறார். ஒரு அப்பா கதாபாத்திரத்தை வைத்து ஒரு நகைச்சுவை காட்சியையும், அதே அப்பா எனும் காதாபாத்திரத்தை தெருவில் கும்பிட்டு ஓட வைத்து நம்மைத் தொடர்ந்து அறைந்துகொண்டேயிருக்கிறார் [ எந்த சினிமாவிலும் இப்படி ஒரு பாத்திரப் படைப்பு வந்ததேயில்லை ]. இவையாவையும், பரியன் எப்படிக் கடக்கிறான் என்பதை எந்தவொரு பிரச்சாரமும், உபதேசமும், சொடுக்கு போட்டு பஞ்ச் பேசும் உரையாடலும் இல்லாமல் புரிய வைக்கிறார்.

 

அவரிடம் பேசியபோது “எப்படி இவ்வளவு நேர்மையாக உங்களால் எழுத முடிந்தது ?” என்பதற்கு பதிலாக அவர் சொன்னது “ நான் பார்த்த, அனுபவித்த நிஜமான மண்ணின் வாழ்க்கையை எழுதினேன். நிஜம் நேர்மையாகத்தான் இருக்கும்”. கதிர், ஆனந்தி , யோகிபாபு, மாரிமுத்து, பூ “ராம்” என தெரிந்த முகங்களில் ஆரம்பித்து கராத்தே வேங்கடேசன், வண்ணாரப்பேட்டை தங்கராஜ் போன்ற அச்சு அசலான மண்ணின் மைந்தர்கள், நிஜமான சட்டக் கல்லூரி வாழ்வு வரை மிகப் பிரமாதமாக வேலை வாங்கி பங்களிக்க வைத்திருக்கிறார்.

இயக்குனர் மாறி செல்வராஜிற்கு அடுத்த முக்கிய பங்களிப்பாளர், சந்தோஷ் நாராயணன் – நவீன இசையிலும் [ பொட்டக்காட்டில் பூ வாசம், வா ரயில் விடப் போலாமா ] கிராமிய இசையிலும் [ எங்கும் புகழ் துவங்க, வணக்கம் வணக்கமுங்க ], கறுப்பி என்னும் சிகரப் பாடலிலும் மிளிர்கிறார். [ நான் யார் பாடல் ஒட்டாமல் இருக்கிறது ]. அதை விட முக்கியமாக பின்னணி இசையில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் செல்வாவின் படத்தொகுப்பிலும் கூடுதல் பலத்துடன் கதை பிரயாணிக்கிறது. ஆகச் சிறந்த வசனங்கள் போகிற போக்கில் தூவப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் வரும் பாடல் வரி ஒன்றில் “பஞ்சாரத்தைத் தூக்கினாலும் ரெண்டு நொடி கோழி நிக்கும்” என்னும் பிரமாதமான வரி வரும். அதைப்போலவே படம் முடிந்த பின்னாலும், நகர மனமில்லாமல் நின்று கொண்டிருந்தேன்.  இந்தப் படத்தைப் பேசுவதை விட இதை தியேட்டரில் பார்ப்பதே ஒரு நல்ல படைப்புக்கும் நாம் தரும் ஆதரவாக இருக்க முடியும்.

 

டோட்டோ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.